டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். நேற்று (01/04/2022) டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்திருந்தார்.
இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்கில் கட்டப்பட்டுள்ள புதிய திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, அமர் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் தமிழக முதல்வர்கள் கலைஞர், அண்ணா உள்ளிட்டோரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவங்கி வைத்தனர். பின்னர் 'கருணாநிதி எ லைஃப்' என்ற புத்தகத்தைத் தமிழக முதல்வர் சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கினார். அதேபோல் பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுதிய 'எ திராவிடன் ஜர்னி' என்ற புத்தகமும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.