உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜக, நேற்று மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இந்தச் சூழலில், தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி உண்டானது. அதேபோல் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதும் பாஜக தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தியினால் மணிப்பூரில் பல்வேறு இடங்களில் உள்ள பாஜக அலுவலகங்களை அக்கட்சியின் தொண்டர்களே தாக்கியுள்ளனர்.
பிரதமர் மோடி, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ஆகியோரின் உருவபொம்மைகைகளை எரித்ததுடன், பாஜக கொடியையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இதன்காரணமாக மணிப்பூரின் இம்பாலில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.