17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி நாளை இரவு 07.00 PM மணியளவில் பதவி ஏற்கவுள்ளார். டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும், இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து புதிய மத்திய அமைச்சரவை பதவி ஏற்கும் நிகழ்வு நடைப்பெறவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதே போல் 'பிம்ஸ்டெக்' கூட்டமைப்பு நாடுகளான வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூட்டான் நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை வங்கதேசம், இலங்கை, மியான்மர், கிர்கிஸ்தான் நாட்டு அதிபர்கள் உறுதி செய்துள்ளனர். நேபாளம், மொரிசியஸ் மற்றும் பூட்டான் பிரதமர்களும், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் டெல்லி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.