Skip to main content

"இதுவொரு நெருக்கடி..அவசரக் கூட்டத்தைக் கூட்டுங்கள்" - மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

supreme court

 

டெல்லியில் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மோசமான நிலையில் உள்ளது.


இந்த நிலையில் டெல்லி காற்று மாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காற்று மாசை கட்டுப்படுத்த இரண்டுநாள் ஊரடங்கை அமல்படுத்த முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த டெல்லி அரசு, டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்தத் தயார் என்றும், ஆனால் அண்டை மாநிலங்களில் உள்ள தேசிய தலைநகர் பகுதிக்கும் ஊரடங்கு விதித்தால்தான் ஊரடங்கு விதிப்பதற்கு அர்த்தம் கிடைக்கும் எனவும் தெரிவித்தது.

 

இதற்கிடையே மத்திய அரசு, பயிர்க்கழிவுகளை எரிப்பது டெல்லி காற்று மாசுபாட்டிற்குக் காரணமல்ல என்றும், பயிர்க்கழிவுகளை எரிப்பது வெறும் 10 சதவீத மாசுபாட்டையே ஏற்படுத்தும் எனத் தெரிவித்தது.

 

இதன்பின்னர் உச்சநீதிமன்றம், காற்று மாசுபாடு ஒரு நெருக்கடி எனத் தெரிவித்ததோடு, டெல்லி அரசு நொண்டி சாக்குகள் கூறுவதாக விமர்சித்தது. தொடர்ந்து நீண்டகால நடவடிக்கைகளைவிட அவசரக்கால நடவடிக்கைகளே இப்போது முக்கியம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

தொடர்ந்து உச்சநீதிமன்றம், தற்போதைக்கு எந்தெந்த தொழிற்சாலைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கலாம், எந்தெந்த வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம், எந்தெந்த மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டை நிறுத்தலாம் என்பது குறித்து நாளை மாலைக்குள் தெரிவிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டை நிறுத்தினால் மின்சாரம் வழங்குவது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.

 

மேலும் உச்சநீதிமன்றம், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கு, கட்டுமான பணிகளை நிறுத்துதல், அத்தியாவசியமற்ற போக்குவரத்து, மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றின் இயக்கத்தை நிறுத்துதல், பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி வழங்குதல் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் பஞ்சாப், ஹரியானா உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களையும் அவரச கூட்டத்தில் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்