டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் டெல்லி கரவால் நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியின் கபில் மிஸ்ரா, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ சபாநாயகரிடம் அளித்த புகாரின் பேரில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் கபில் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்துள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் மிஸ்ரா, சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லி மாநிலத்தில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.