இந்தியாவில் கோவிஷீல்ட் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு பரவலாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளைத் தவிர ரஷ்யத் தடுப்பூசியான ஸ்புட்னிக் v தடுப்பூசியும் இந்தியாவில் செலுத்தப்பட்டு வந்தாலும், அது இன்னும் முழு வீச்சில் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில் இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர், அமெரிக்கத் தடுப்பூசியான மாடர்னாவை இறக்குமதி செய்து, இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர சிப்லா மருந்து நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு, உள்நாட்டில் சோதனை செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. அதேநேரத்தில் அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழு அளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முன்பு, அத்தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட முதல் நூறு பேரின் பாதுகாப்பு மதிப்பீட்டுத் தரவை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இதன் அடிப்படையிலேயே அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மாடர்னா தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார். மாடர்னா தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டது ஆகும். மாடர்னா தடுப்பூசியைத் தொடர்ந்து விரைவில் ஃபைசர் தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.