மும்பையில் மாபெரும் பேரணி நடத்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, மும்பையைச் சேர்ந்த டப்பாவாலாக்கள் உணவளிக்க முன்வந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் நாசிக் மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபயணம் மேற்கொண்டனர். இந்தப் பேரணியில் சுமார் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்டனர். தற்போது அவர்கள் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். அம்மாநில அரசு விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
இந்நிலையில், பேரணியாக சுமார் 180 கிமீ நடந்தே வந்து, ஆசாத் மைதானத்தில் காத்திருக்கும் விவ்சாயிகளுக்கு உணவளிக்கு மும்பையைச் சேர்ந்த டப்பாவாலாக்கள் முன்வந்துள்ளனர். இதுகுறித்து டப்பாவாலாக்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுபாஷ் தலேகர், ‘நமக்கு உணவளிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உணவளித்து உதவ நினைத்தோம். இதற்காக மத்திய மும்பை பகுதியான தாதரில் இருந்து, தெற்கு மும்பை பகுதியான கோலபா வரையிலுள்ள பகுதிகளில் இருந்து உணவுகளைச் சேகரித்து ஆசாத் மைதானத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். மேலும், ரோட்டி பேங் முறையைப் பின்பற்றி மும்பையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து உணவுகளைச் சேகரித்து விநியோகித்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
தற்சமயம், விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட ஒருவாரமாக ஓயாமல் நடந்த விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பது, அவர்களது போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி என்றே சொல்லலாம்.