கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 9 ஆம் தேதி கர்நாடக பாஜக மாநிலச் செயலாளர் கேசவ பிரசாத், பெங்களூரு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த புகாரில் மே மாதம் 5 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் செய்தித் தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்தில் பாஜக அரசாங்கம் 40 சதவீத ஊழலில் ஈடுபட்டதாகச் செய்தி வெளியானது. இந்த விளம்பரம் அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக அவர் தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து இந்த அவதூறு வழக்கு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதில் ஜூலை 27 ஆம் தேதிக்குள் வழக்கு குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.