முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு விவகாரத்திற்காக அண்மையில் விமானநிலையத்தில் வைத்து சி.பி.ஐ. கைதுசெய்தது. இதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கையில் பா.ஜ.கவுக்கு பங்குண்டு என கார்த்தி சிதம்பரம்தத்தின் ஆதரவாளர்கள் கூறிவந்தனர். ஆனால், பா.ஜ.க.வினர் இதை மறுத்தனர். பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறுகையில், ‘இது என்னால் தொடரப்பட்ட வழக்கு. இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என தெரிவித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டால் சிறப்பு பாதுகாப்பு வழங்கவேண்டுமென்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கை விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து சிறை விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பே வழங்கப்படும், மேலும் சிறை மருத்துவரின் அறிவுரையின் படியே மருந்துகள் வழங்கப்படும் எனவும், சிறைக்காலத்தில் வெளி உணவுகள் அனுமதிப்படாது எனவும் நீதிபதி மறுத்துவிட்டார்.
சி.பி.ஐ. காவல் முடிந்துள்ள நிலையில் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். சி.பி.ஐ. தரப்பு வாதங்களைக் கேட்டபிறகு 12 நாட்கள் நீதிமன்றகாவல் விதித்த நீதிமன்றம், அவரை 24-ஆம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. அவரின் ஜாமீன் மனு வரும் 15-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கின்ற நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.