தெலுங்கானா மாநிலம், கோத்தகிரி காவல் துணை ஆணையர் சந்தீப்புக்கு, இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் நின்று பேசியபடி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் அந்த இளம்பெண், நீண்ட காலத்திற்கு முன் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அதனை அவருடைய கணவர் மன்னித்து விட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், ‘தன்னுடைய குடும்பத்தினர் பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி வந்ததால் மன உளைச்சலில் ஆளான நாங்கள் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டு உள்ளோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை கண்ட சந்தீப், உடனடியாக காவல் துணை ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து தம்பதியரின் தற்கொலையை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தியுள்ளார். அதன்படி, உள்ளூர் போலீசாரும் கோதாவரி ஆற்று பகுதியில் தம்பதியரை தேடி வந்துள்ளனர். ஆனால், அவர்களை கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து, அவர்களின் செல்போன் சிக்னலை அடிப்படையாக கொண்டு தேடினர். அதன்படி, போலீசார் தேடியதில் ரெயில் தண்டவாளத்தில் செல்போன் இருப்பதாக காண்பித்தது. ரெயில் தண்டவாளத்தில் சென்று பார்த்தபோது தம்பதியர் இருவரும் இறந்துகிடந்து உடல்கள் மட்டும் கிடந்தன.
அதனையடுத்து, அந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நிஜாமாபாத் மாவட்டம் ஹெக்தோலி பகுதியைச் சேர்ந்த அணில் (28) என்பதும், அவருடைய மனைவி சைலஜா (24) என்பதும் தெரியவந்தது. மேலும், சம்பவம் நடந்த அன்று வீட்டை விட்டு வெளியேறிய தம்பதி, போலீஸுக்கு வீடியோவை அனுப்பிவிட்டு நவிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது. போலீஸுக்கு வீடியோ அனுப்பி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.