உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8- ஆம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31- ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சுற்றுலாத் தலங்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், மூடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பல்கலைக்கழகத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா விடுமுறையால் உத்தரப்பிரதேசத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்றும், அனைவரும் 'ஆல் பாஸ்' என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பால் தேர்வு இன்றி மாணவர்கள் அடுத்த வகுப்பு செல்கின்றனர்.
இந்த மாநிலத்தில் மார்ச்- 23 ஆம் தேதி முதல் மார்ச்- 28 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவிருந்த நிலையில் ரத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏப்ரல் 2- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்று உ.பி அரசு தெரிவித்துள்ளது.