நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆந்திரா - 25 தொகுதிகளுக்கும், தெலங்கானா - 17 தொகுதிகளுக்கும், பீகார் - 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் - 4 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் - 8 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா - 11 தொகுதிகளுக்கும், ஒடிசா - 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் - 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் - 8 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீர் 1 தொகுதிக்கும் என 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், தெலுங்கானா மாநிலத்துக்குட்பட்ட ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மாதவி லதா போட்டியிடுகிறார். அந்த வகையில், ஹைதராபாத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பார்வையிட்டார்.
அப்போது, ஆசம்பூர் பகுதியில் வாக்களிக்க வந்த ஏராளமான இஸ்லாமிய பெண்களிடம், ஆதார் கார்டை கேட்டு மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவில், அங்கு அமர்ந்திருந்த இஸ்லாமிய பெண்களிடம் ஆதார் கார்டை கேட்டு சரிபார்த்தும், அவர்கள் அணிந்திருந்த பர்தாவை தூக்கச் சொல்லி, முகத்தை காட்டும்படியும் மாதவி லதா கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து மாதவி லதா கூறுகையில், ‘நான் ஒரு வேட்பாளர். சட்டத்தின்படி, முகக்கவசம் இல்லாமல் அடையாள அட்டைகளை சரிபார்க்க வேட்பாளருக்கு உரிமை உண்டு. நான் ஒரு ஆணல்ல, நான் ஒரு பெண், மிகவும் பணிவுடன் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். யாரேனும் ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்க விரும்பினால், அவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம்” என்று கூறினார்.
ஏற்கனவே, ராம நவமி ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவர் தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து அருகில் இருக்கும் மசூதியை நோக்கி எய்து சர்ச்சைக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.