மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த 5 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்றிருந்தார். அந்த விழாவில், திரைப்பட நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது, அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, மகேஷ் பட், அனில் கபூர் மற்றும் பலருடன் இணைந்து முதல்வர் மம்தா பானர்ஜி மேடையில் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து, மம்தா பானர்ஜி நடனமாடுவது குறித்து மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர், “முதல்வர் மம்தா பானர்ஜி திரைப்பட விழாவில் பங்கேற்று நடனமாடுவது ஏற்புடையதல்ல” என்று கூறினார். அதோடு மட்டுமல்லாமல், சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கருத்து தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, “நாட்டிலுள்ள ஒரே பெண் முதல்வரை மத்திய அமைச்சர் அவதூறாகப் பேசியுள்ளார். அவருடைய பேச்சு வெட்கக் கேடானது மட்டுமல்லாமல் இது பெண்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு ஆகும். இதுபோன்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டுமா? இதுதான் பா.ஜ.க மற்றும் அக்கட்சியின் அமைச்சர்களின் பிரச்சனை ஆகும். பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
இதனையடுத்து, இன்று (07-12-23) நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பேசிய மத்திய இணை அமைச்சரை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் இன்று (07-12-23) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது அமைச்சர் கிரிராஜ் சிங் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.