சி.எம்.ஐ.இ (CMIE) எனும் பொருளாதார கண்காணிப்பு நிறுவனம் சமீபத்தில் வேலை வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வேலை வாய்ப்பின்மை 6.9% அதிகரித்துள்ளதாக முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும் இது கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகம் என்பதனையும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது. 2017 அக்டோபர் மாதம் 407 மில்லியன் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது. அதே 2018 அக்டோபரில் 397 மில்லியன் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 2.4% குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தேடுவோர்களின் எண்ணிக்கை 2017 ஜூலையில் 14 மில்லியனாக இருந்தது. ஆனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம் அந்த எண்ணிக்கையின் அளவு 21.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும் 2018-ல் 7.9 மில்லியன் உயர்ந்து 29.5 மில்லியனாக இருக்கிறது என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது. டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஸ்டேன்ட் அப் இந்தியா போன்ற பல திட்டங்கள் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதற்குமுன் நடத்தப்பட்ட வேறொரு ஆய்வில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடைவடிக்கைகள் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.