18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது.