அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு இறுதிபட்டியல் நாளை காலை வெளியிடப்படும் நிலையில் அசாம் மாநிலத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல இடங்களில் போராட்டங்களும் வெடித்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசிய பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது.
இந்தநிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் நாளை வெளியாக உள்ளது. இதனால் அசாம் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கலவரம் ஏற்படலாம் என்ற காரணத்தினால் அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அசாம் முதல்வர் சர்பானந்த சோனவால், "மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், பதற்றப்படவும் தேவையில்லை. யாருடைய பெயராவது இறுதிப்பட்டியலில் விடுபட்டு இருந்தால் அவர்கள் தங்கள் பெயரை சேர்க்க உரிய கால அவகாசம் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.