கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே முடக்கிவைத்துள்ள நிலையில், அதன் தாக்குதலிலிருந்து இந்தியப் பொருளாதாரமும் தப்பிக்கவில்லை என்பதே நிதர்சனம். இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழலில் நேற்று மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் மொத்த ஜிடிபி -யில் சுமார் பத்து சதவீதத்தை மக்கள் முன்னேற்றத்திற்கு ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். சுமார் 220 லட்சம் கோடி ஜிடிபி மதிப்பை அடிப்படையாக வைத்து அதிலிருந்து 20 லட்சம் கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "பிரதமர் நமக்குத் தலைப்பையும் பிறகு காலி காகிதத்தையும் கொடுத்துள்ளார். இயல்பாக இதற்கு என்னுடைய எதிர்வினையும் வெற்றிடம்தான். நிதியமைச்சர் இந்த வெற்றிடமாக உள்ள பக்கத்தை இன்று பூர்த்தி செய்வார் என்று எதிர்பாக்கிறோம். பொருளாதாரத்தினுள் கூடுதலாக இடப்படும் ஒவ்வொரு ரூபாயையும் கவனமுடன் கையாள வேண்டும். யாருக்கு என்ன கிடைக்கிறது என்பதையும் கவனத்துடன் ஆராய்வோம். முதலில் நாங்கள் கவனிப்பது என்னவெனில் ஏழைமக்களுக்கு, பசியில் வாடுவோருக்கு, சீரழிந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதையே. தங்கள் சொந்த ஊர்களுக்குப் பல கிலோமீட்டர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வந்து சேர்ந்தவர்கள் என்ன எதிர்பார்க்க முடியும் என்பதையும் அவதானித்து வருகிறோம். பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் 13 கோடி அடித்தட்டு குடும்பங்களுக்கு உண்மையான பணம் என்ற அளவில் என்ன கிடைக்கிறது என்பதையும் கவனத்துடன் பார்ப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.