Skip to main content

''சிங்கங்களின் பெயரை மாற்றுங்கள்...'' - வினோத வழக்கில் தீர்ப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
 "Change the name of the lions...." -Judgment in a strange case

மேற்குவங்க மாநிலம் சிலிபுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியில் பூங்காவில் உள்ள ஆண் சிங்கத்திற்கும் பெண் சிங்கத்திற்கும் பெயர் மாற்ற வேண்டும் என்ற விஷ்வ இந்து அமைப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் சிலிபுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியில் பூங்காவில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி 7 வயது ஆண் சிங்கம் ஒன்று பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. அதன் பெயர் அக்பர். அதேபோல அங்கு இருக்கும் 6 வயது பெண் சிங்கத்தின் பெயர் சீதா. ஒரே இடத்தில் அக்பர், சீதா என பெயர் கொண்ட ஆண் பெண் சிங்கங்கள் இருப்பதற்கு விஷ்வ இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. வினோதமான முறையில் இதற்கு வழங்கும் தொடுக்கப்பட்டது. இராமாயண கதாபாத்திரமான சீதா இந்து மத வழக்கங்களில் கொண்டாடப்படுபவர். அதனால் அக்பர் என்ற பெயருடைய சிங்கத்துடன் சீதா என்ற பெயர் கொண்ட சிங்கத்தை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். எனவே சிங்கங்களின் பெயரை மாற்ற வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது விஷ்வ இந்து அமைப்பு.

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற முதல் விசாரணையில், அன்பின் அடிப்படையில் சிங்கங்களுக்கும் பெயர் சூட்டப்பட்டு இருக்கலாம், இதில் என்ன பிரச்சனை என நீதிபதி சவுகத் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கு விஷ்வ இந்து அமைப்பு, இன்று சிங்கத்திற்கு பெயர் வைத்தது போல நாளை வேறு விலங்குகளுக்கு பெயர் வைக்கலாம். எனவே இதை தடுக்க வேண்டும். இது எங்களுடைய மனதை புண்படுத்தும் என பதில் அளிக்கப்பட்டது.

துர்கா பூஜையில் சிங்கம் இடம் பெற்றுள்ளது. பல இந்து கடவுள்களின் வாகனங்களாக சிங்கங்கள் உள்ளது. சிங்கங்கள் கடவுளாகவும் போற்றப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். கடவுள்களின் வாகனங்கள் தான் சிங்கங்கள். ஆனால் அவைகளை வணங்குவதற்காக தனியாக மந்திரங்கள் இல்லை என மனுதாரர் தரப்பில் பதில் வைக்கப்பட்டது.

இந்த மனுவை பொதுநலமனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. குறிப்பிட்ட சிங்கங்களுக்கு பெயர் வைத்தது மேற்கு வங்க அரசோ அல்லது பூங்கா நிர்வாகமோ அல்ல, சிங்கங்களை ஏற்கனவே வைத்திருந்த திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் என மேற்குவங்க அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. இந்த வழக்கில் நீதிபதி சவுகத் பட்டாச்சார்யா பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ''நேற்று இரவு நான் நன்றாக யோசித்துப் பார்த்தேன். கடவுள், சுதந்திர போராளிகள், தலைவர்களின் பெயர்களை ஒரு விலங்குக்கு வைக்கலாமா? ஒரு சிங்கத்திற்கு விவேகானந்தர் என்றோ, ராமகிருஷ்ண பரமஹமசர் என்றோ பெயர் வைப்பீர்களா? அதை உங்களால் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியதோடு, மேற்குவங்க அரசு வழக்கறிஞரைப் பார்த்து, உங்கள் வீட்டில் செல்ல பிராணிகளின் பெயர்கள் என்ன என கேட்டார். அதற்கு அவர், டாஃபி, டஃபில், தியோ என பதிலளித்தார். எந்த சர்ச்சையும் ஏற்படாத வகையில் வீட்டு விலங்குகளுக்கு பெயர் வைத்துள்ள நீங்களே சிங்கங்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதிகாரிகளிடம் கேளுங்கள் என நீதிபதி தெரிவித்தார். மேலும் தயவு செய்து எந்த விலங்குகளுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ தீர்க்கதரிசிகள், சுதந்திர போராளிகள் பெயர்களை  வைக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்