இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்களைப் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்குக் கடந்த ஜூன் 8ல் மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பலகட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டு தற்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார். மத்திய உயிரியல் தொழில் நுட்பத்துறையும் சீரம் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்தது. தடுப்பூசியின் ஆரம்ப விலை 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் என சீரம் நிறுவன தலைமைச்செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்கத் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.