கர்நாடக அரசு காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்த மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசின் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும், முன்னாள் இந்நாள் முதல்வர்களும் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணைக்கு அனுமதி கோரிவருகின்றனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணைக்கு அனுமதி தரக் கூடாது என வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி சென்ற தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழுவும் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியது.
இந்தநிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நான் டெல்லி சென்றபோது, அவர்கள் அணைக்கு ஒப்புதல் தருவதாக கூறினார்கள். மேகதாது அணைக்காக விரைவில் நான் டெல்லி செல்வேன். மத்திய அமைச்சர்களைச் சந்தித்து உண்மை நிலவரத்தைத் தெரியப்படுத்துவதோடு, உச்ச நீதிமன்ற உத்தரவையும் விளக்குவேன்" என கூறியுள்ளார்.
மேலும் அவர், "தண்ணீரில் எங்கள் பங்கைப் பெறுவதற்காகவும், தடுப்பணை கட்டுவதற்காகவும் நடத்தப்பட வேண்டிய சட்டப் போராட்டம் குறித்து நீர்வளத்துறை அமைச்சருடனும் வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்துவேன்" எனவும் தெரிவித்துள்ளார்.