தூய்மை இந்தியா திட்டத்தில் மத்திய அரசை முந்திய அருணாச்சல்பிரதேச அரசு!
திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாத மாநிலம் என்ற பெருமையை அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் அடைந்துள்ளது.
நம் இந்திய நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி உலகமே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடு என்ற பெருமையை அது அடையவேயில்லை. தூய்மை இந்தியா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அதை முறையாக செயல்படுத்த முடியாமல், விளம்பரச் செலவுகளுக்கு மட்டும் கோடிகளைப் பயன்படுத்துகிறது மத்திய அரசு.
மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாத நாட்டை உருவாக்க சபதம் எடுத்தது. அதற்காக அது நிர்ணயித்த காலக்கெடு அக்டோபர் 2, 2019. ஆனால், டிசம்பர் 31ஆம் தேதியே அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது அருணாச்சலபிரதேச அரசு. இந்த மாநிலத்தில் 21 மாவட்டங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிமிற்கு அடுத்தபடியாக திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலம் என்ற பெருமையை அருணாப்பிரதேசம் அடைந்துள்ளது.
மத்திய அரசு கழிவறைகள் கட்டுவதற்கு ரூ.12ஆயிரம் ஒதுக்குகிறது. அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்பதால், கூடுதலாக ரூ.8 ஆயிரம் மாநில நிதியைப் பயன்படுத்தி அனைத்து கிராமங்களிலும் கழிப்பிடங்களைக் கட்டித்தந்துள்ளது அம்மாநில அரசு.