நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் வாடிக்கையாகி வருகிறது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அனைத்தும் புரளி என்று கண்டயறிப்பட்டு வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களின் பயண அட்டவணை மாற்றம், விமான ரத்து என விமான சேவைகள் பலவகைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், விமான பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், பயணிகள் மத்தியில் பீதியையும் உருவாக்கியுள்ளது.
அதன்படி, கடந்த 24ஆம் தேதியன்று மட்டும், ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஆகாசா ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து புலனாய்வு அமைப்புகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். இவ்வாறு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமான பயணிகள் பீதியடைந்துள்ளன. முன்னதாக விமான நிறுவனங்களுக்கு மிரட்டல்கள் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியிருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலமாக விமான நிலையங்களுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்கள தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவிக்கையில், ‘விமான நிலையங்களுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான பதிவுகள், தகவல்களை சமூக வலைத்தளங்கள் உடனே நீக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது.