தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தர மறுப்பதாக தெலங்கானா அரசு தெரிவித்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்டுவதில் மாநில அமைச்சரவை விடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் தாமதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு ஆளுநர் காலதாமதம் செய்கிறார் எனக் கூறி பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்ற கருத்தை தெரிவித்திருந்தது.
இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கில் ஆளுநர் தாமதப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது எனக் கூறி இருந்தது. இந்நிலையில் தெலங்கானா ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது உற்று நோக்கப்படும் ஒன்றாக உள்ளது.