பலாத்கார வழக்கில் அரியானா சாமியாருக்கு 10 ஆண்டு சிறை
தேரா சச்சா சவுத்தா அமைப்பின் தலைவரான சாமியார் ராம்ரஹீமுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்தது.
அரியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மீக அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரகீம் சிங் உள்ளார். 50 வயது சாமியாரான இவருக்கு அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர். இவர் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2002ல் மொட்டை கடிதத்தில் புகார் வந்தது. அதன் அடிப்படையில் குர்மீத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்கு விசாரணை சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி விசாரித்த சிபிஐ, கடந்த 2007ம் ஆண்டு அம்பாலா நீதிமன்றத்தில் குர்மீத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பிறகு இந்த வழக்கு அரியானாவில் உள்ள பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஜெகதீப் சிங், குர்மீத்தை குற்றவாளியாக அறிவித்தார். அவருக்கான தண்டனை 28-ம் தேதி அறிவிக்கபடும் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ரயில்கள், ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்குகள், டிவி மற்றும் பத்திரிகையாளர் வாகனங்கள், பஸ் உள்ளிட்ட வாகனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதுமே, அரியானா போலீசார் குர்மீத்தை கைது செய்து ரோடக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைத்து விட்டனர். அவருடைய ஆதரவாளர்களால் மீண்டும் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாலும், தீர்ப்பு வழங்கும் நீதிபதியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், சுனாரியா சிறைக்கே அவரை அழைத்து சென்று தீர்ப்பை வழங்க வேண்டும் என்று பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, நீதிபதி ஜெகதீப் சிங் இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக சுனாரியா சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். தேரா சச்சா சவுத்தா அமைப்பின் தலைவரான சாமியார் ராம்ரஹீமுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.