சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். 'சோதனைகள் மூலம் எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்திவிடலாம் எனப் பாசிச பாஜக அரசு நினைக்கிறது. அமலாக்கத்துறையின் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் எங்களை ஒரு அங்குலம் கூடப் பின்னுக்குத் தள்ளாது' எனத் தெரிவித்துள்ளார்.