பீகாரில் பாடகி ஒருவர் நேரலை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த போதே அவர் மீது குண்டு பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில நாட்டுப்புற பாடகி நிஷா உபாத்யாய், சரண் மாவட்டத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டு இருந்தார். அந்நிகழ்ச்சியில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது அவரது இடது தொடையில் குண்டு பாய்ந்தது. இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த அவரை உடனடியாக பாட்னா நகரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து பேசிய காவல்துறையினர், “நாங்கள் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அப்பகுதிக்கு விரைந்தோம். ஆனால் தற்போது வரை எழுத்துப்பூர்வமாக புகார்கள் எதுவும் பதியப்படவில்லை. துப்பாக்கிச்சூடு எப்படி நடத்தப்பட்டது. அதில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
இது குறித்து பேசிய பீகார் மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர குமார், “இது மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுக்கூட்டங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், திருமணங்கள் அல்லது பிற நிகழ்ச்சிகளில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளாகவே இருந்தாலும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது துப்பாக்கிகளைக் கொண்டு வானத்தை நோக்கி சுடுவது (Celebratory gunfire) குற்றச்செயல் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். மருத்துவமனையில் உள்ள பாடகி உபாத்யாய் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.