இந்திய குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான சூழ்நிலைக்கிடையே இன்று தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பலத்த அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் விவாதமின்றி வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றியது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுதொடர்பாக, "மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியிருக்கும் என நாங்கள் கூறினோம். விவசாயிகளின் வலிமையைத் தொழிலதிபர்களின் வலிமை தாங்காது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் அதனைக் கூறினோம். இன்று இந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவாதமின்றி வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது துரதிருஷ்டவசமானது" எனக் கூறியுள்ளார்.
மேலும் ராகுல் காந்தி, "விவாதம் நடத்த இந்த அரசு பயப்படுகிறது. விவசாயிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இந்திய மக்களின் பலத்தை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. வரவிருக்கும் மாநில தேர்தல்களும் அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்" எனக் கூறியுள்ளார்.