Skip to main content

‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ சவாலை முடிக்க புனே சென்ற சிறுவன்: காவல்துறையினரால் மீட்பு

Published on 11/08/2017 | Edited on 11/08/2017
‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ சவாலை முடிக்க புனே சென்ற சிறுவன்: காவல்துறையினரால் மீட்பு

ப்ளூ வேல் சேலஞ்ச் எனப்படும் தற்கொலையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, கொடுக்கப்பட்ட சவாலை நிறைவேற்ற புனே சென்றுகொண்டிருந்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் காணாமல்போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரை அடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் அந்த சிறுவன் ப்ளூ வேல் சேலஞ்ச் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி வருவதாகவும், அதில் கொடுக்கப்பட்ட சவாலை முடிப்பதற்காக புனே சென்றிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து புனே நோக்கி செல்லும் பேருந்துகளை நிறுத்தி சோதனை நடத்தியதில் அந்த சிறுவன் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளான். காவல்துறையினர் அவனை அழைத்துச் செல்கையில் யாரோடும் எதுவும் பேசாமல் அந்த சிறுவன் அமைதியாக இருந்துள்ளான். பின்னர், காவல்நிலையம் வந்த அவனது அப்பா அவனை வீட்டிற்குக் கூட்டிச் சென்றுள்ளார்.

ப்ளூ வேல் சேலஞ்ச் எனப்படுவது ரஷ்யாவில் உருவான கொடூரமான ஆன்லைன் விளையாட்டுக்களில் ஒன்று. இதில் கலந்துகொள்பவர் தன்னைத் தானே வருத்திக் கொள்வது மாதிரியான சவால்கள் கொடுக்கப்பட்டு, இறுதியில் தற்கொலை செய்துகொள்ள வைக்கும் அளவுக்கு மோசமான விளையாட்டு. இந்த விளையாட்டால் இதுவரை உலகளவில் 130 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்ததற்கு இந்த விளையாட்டு காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்