‘ரத்தம் படிந்த கைகள் உங்களுடையது’ - கேரள முதல்வரை சாடும் அமித்ஷா!
கேரளாவில் நிகழ்த்தப்படும் அரசியல் கொலைகளுக்கு கேரள முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களும்தான் காரணம் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலத்தில் நடக்கும் அரசியல் கொலைகளை மையமாகக்கொண்டு, கேரளாவில் பாஜக சார்பில் அமித்ஷா தலைமையில் ஜன்ரக்ஷா யாத்திரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களைப் போல் அல்லாமல், தீவிர இந்துத்துவ முழக்கங்கள் மற்றும் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரங்களோடு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
இதில் பேசிய அமித்ஷா, 120 பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களை அரசியல் வன்முறையின் பெயரில் கொன்ற ரத்தக்கறைகள் உங்கள் சட்டைகளில் இருக்கின்றன. அவர்கள் கொல்லப்பட்டதற்கு நீங்கள்தான் காரணம். வன்முறை கேரளாவின் கலாச்சாரம் கிடையாது. ஆனால், சிபிஎம் கேரளாவை சீரழித்துவிட்டது. கேரள முதல்வரின் சொந்த ஊரான கண்ணூரில் 84 பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு அவரேதான் பொறுப்பேற்க வேண்டும் என குற்றம்சாட்டினார்.
மேலும், வடமாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில்(கோரக்பூர் பி.ஆர்.டி) குழந்தைகள் இறந்ததைக் குறித்து கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள், ஏன் இங்கு நடக்கும் அரசியல் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. உங்கள் கண்களுக்கு சிவப்புத் தீவிரவாதங்கள் தெரியாதா? வன்முறைகளுக்கு நிறங்களே கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
இந்த ஜன்ரக்ஷா யாத்திரை வரும் 17ஆம் தேதி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நிறைவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்