![bjp workers](http://image.nakkheeran.in/cdn/farfuture/DMhfP_WjKI4T0ELx0DObtJbtnllnlgS03Zz8VrECbjA/1615875744/sites/default/files/inline-images/bjp_54.jpg)
மேற்கு வங்கத்தில் வருகிற மார்ச் 27ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பரபரப்பாக இருந்து வந்த தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு சூடு பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் நேரடி போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இரண்டும் இணைந்து போட்டியிடுகின்றன.
திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர்களால் மம்தாவிற்கு சிக்கல் ஏற்படும் என கருதப்பட்ட நிலையில், அது பாஜகவிற்கே சிக்கலாகியிருக்கிறது. பாஜகவில் முன்பு இருந்தவர்களுக்கும், தற்போது புதிதாக இணைந்துள்ளவர்களுக்கும் இடையே முக்கியத்துவம் யாருக்கு என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை மாற்றக்கோரியும் மேற்கு வங்க பாஜக தொண்டர்கள், பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹூக்லி மாவட்டத்தின் சின்சுராவில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு சேதப்படுத்திய அவர்கள், அதே மாவட்டத்திலுள்ள சந்தர்நாகூரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
மேற்கு வங்கத்தின் ஹவுராவில் உள்ள பஞ்ச்லா கட்சி அலுவலகத்தின் முன்பு, பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸிலிருந்து சில நாட்களுக்கு முன்பு பாஜகவிற்கு வந்தவருக்கு, தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டதைக் கண்டித்து சிங்கூர் பாஜக அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. கொல்கத்தாவின் ஹேஸ்டிங்ஸ் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தையும் பாஜக தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல், பாஜகவிற்கு தலைவலியாக மாறியுள்ளது.