உத்தரபிரதேசம் மதுரா பகுதியில் உள்ள கோயிலில் இஸ்லாமியர் ஒருவர் தொழுகை நடத்தியதையடுத்து, பாக்பத் மசூதியில் பாஜக நிர்வாகி ஒருவர் அனுமன் மந்திரம் ஓதியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் மதுராவில் உள்ள புகழ்பெற்ற நந்த் கிஷோர்பாபா கோயில் வளாகத்தில் பைசல் கான் என்ற இஸ்லாமியர் கடந்த மாதம் 29-ம் தேதி தொழுகை நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து பைசல் கான் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த டெல்லியைச் சேர்ந்த அலோக் ரத்தன் மற்றும் நீலேஷ் குப்தா உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மசூதியில் நுழைந்து மந்திரங்களை ஓதி, அதை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் ஈத்கா மசூதியில் திடீரென நுழைந்து அனுமன் மந்திரம் ஓதிய ராகவ் மித்தல், ராக்கி சிங், சவுரப், கன்னையா ஆகிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாக்பத்தின் காக்ரா பகுதியின் வினட்பூர் கிராம மசூதியில் பாஜகவின் மாவட்ட துணைத்தலைவர் மனுபால் பன்ஸல் அனுமன் மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரம் ஓதிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அம்மசூதியின் மவுலானாவிடம் அனுமதி பெற்றே இச்செயலை தான் செய்ததாக மனுபால் பன்ஸல் கூறியுள்ளார். அம்மசூதியின் மவுலானாவான அலி ஹசன் இது குறித்துக் கூறும் போது, மனுபால் பன்ஸலை தான் அனுமதித்தாகவும், அதில் எந்த தவறும் இல்லை என்றும் அனைவரும் சகோதரத்துவத்தை வளர்க்க பாடுபட வேண்டும் எனவும் கூறினார்.
பாக்பத்தின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அங்குள்ள மற்ற மசூதிகளிலும் நுழைந்து மந்திரங்கள் ஓதப்போவதாக வெளியான தகவலையடுத்து, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.