10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் பாஜக தலைவராக இருப்பவர் பண்டி சஞ்சய். இவருக்கு பாஜக பிரமுகர் பரம் பிரசாந்த் என்பவர் வாட்ஸ்ஆப் மூலம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளை அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று காலை 9.30 மணிக்கு இந்தி தேர்வு துவங்கிய நிலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பாஜக பிரமுகர் பரம் பிரஷாந்த் என்பவர் கமலாப்பூர் தேர்வு மையத்தில் இருந்து வினாத்தாளை புகைப்படம் எடுத்து மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய்க்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானா காவல்துறை இவ்விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக மாநிலத் தலைவரை கைது செய்ய வந்துள்ளனர். தொடர்ந்து வாக்குவாதம் எழவே அவரை குண்டுக்கட்டாக காவல்துறையினர் தூக்கிச் சென்றனர். மாநிலத் தலைவரின் கைதுக்கு பாஜக தொண்டர்கள் பெரும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர். இது குறித்து பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்கள் முன் தெலுங்கானா மாநிலத்தில், மாநில பப்ளிக் சர்விஸ் கமிஷன் வினாத்தாள் கசிந்தது. இதற்கு பண்டி சஞ்சய் மாநில அரசை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.