மாநிலங்களவையில் 92 உறுப்பினர்களுடன் மிகப்பெரிய வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு பாஜக சார்பில் 10 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 92 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் பலம் மாநிலங்களவையில் 38 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், அசாம் கன பரிசத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாட்டாளி மக்கள் கட்சி, போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் துணையோடு ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 104 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை பெரும்பாலும் பாஜகவுக்கே தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். அந்தவகையில் பார்க்கும்போது, மாநிலங்களவையில் அனைத்து மசோதாக்களையும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இன்றி நிறைவேற்றும் அளவு பாஜக தற்போது பலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.