பீகார் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய பொறுப்பாளர்களை, அண்மையில் பா.ஜ.க நியமித்தது. குறிப்பாக அதிக கவனம் செலுத்தவேண்டிய மாநிலமாக, மேற்குவங்கத்தை பா.ஜ.க தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 16 உறுப்பினர்களை மட்டுமே மேற்குவங்க சட்டசபையில் கொண்டுள்ள பா.ஜ.க கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களைக் கைப்பற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ள பா.ஜ.க இம்முறை சட்டசபைத் தேர்தலில் மம்தாவுக்குப் போட்டியாக உருவெடுக்க முயன்று வருகிறது. எனவே இதற்காக மேற்குவங்க பா.ஜ.க பொறுப்பாளராக மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்கியாவை நியமித்தது பா.ஜ.க.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிடவும், அதற்கான பணிகளை மேற்பார்வையிடவும், 11 பேர் கொண்ட குழு ஒன்றை பா.ஜ.க அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முழுவதும் பாஜகவின் முக்கியத் தலைவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள, இந்தக் குழுவில் கட்சி பொதுச் செயலாளர்கள் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் துஷ்யந்த் கவுதம், சுனில் தியோதர், வினோத் தவ்தே, வினோத் சோன்கர், ஹரிஷ் திவேதி, அமித் மால்வியா, மாநிலத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாஜகவின் திட்டப்படி, மேற்குவங்க மாநிலத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, இந்தக் குழு தேர்தல் பணியாற்றும் என்றும், வேட்பாளர் தேர்வும் இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகிய இருவரும் வழிநடத்த உள்ளதாகவும், இந்தக் குழுவில் உள்ள சில தலைவர்கள் கொல்கத்தாவில் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.