இந்து கடவுள்களில் மிகவும் முக்கியவரான சிவபெருமான் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவர் என பிஹார் மாநில பாஜக அமைச்சர் கிஷோர் பிந்த் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில ஆளுநருக்கு நேற்று பாட்னாவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் துணை முதல்வரும், பாஜக தலைவருமான சுஷில் குமார் மோடி, பாஜக அமைச்சர் பிரிஜ் கிஷோர் பிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர். இதில் பேசிய பிரிஜ் கிஷோர், "கடவுள்களில் உயர்ந்தவரான மகாதேவ் (சிவன்) சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிந்த் சாதியைச் சேர்ந்தவர்" என பேசினார். அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "நான் சிவ புராணத்தில் என்ன குறிப்பிட்டுள்ளதோ அதைத்தான் கூறினேன். வரலாற்று அறிஞர் வித்யாதர் மகாஜன் எழுதிய அந்த நூலில், கடவுள் சிவன் பிந்த் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. கடவுள் ராமர் சத்ரியகுலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள், கடவுள் கிருஷ்ணர் யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள் அப்படி இருக்கும்போது, சிவன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாதா" என கேள்வியும் எழுப்பியுள்ளார்.