‘பாஜக, ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை!’- பினராயி விஜயன் பதிலடி
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து கேரளா கற்றுக்கொள்ள எதுவுமில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பாஜக சார்பில் ‘அரசியல் கொலை’களை முன்னிறுத்தி 15 நாட்களுக்கு ஜனரக்ஷா யாத்திரை நடத்தப்பட்டது. இதற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமை தாங்கினார். இந்த யாத்திரையில் பாஜகவினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரடியாகவே தாக்கிப்பேசினர். அமித்ஷா பேசுகையில், ‘முதல்வரே எங்களோடு மோதவேண்டும் என்றால் கொள்கைகளாலும், வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியும் மோதுங்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி தரும்விதமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில், ‘பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலமும், கேரளாவின் சர்வதேச வளர்ச்சிக்கு அருகிலோ அல்லது நிகராகவோ ஒப்பிடும் அளவிற்கு இல்லை. பாஜக சார்பில் சி.பி.எம்.ஐ விமர்சிக்கும் வகையில் நடத்தப்பட்ட 15 நாட்களுக்கான ஜனரக்ஷா யாத்திரை உண்மையில் தோற்றுப்போன யாத்திரைதான். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் இருந்து கேரளா கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை. கேரளாவின் இதயம் மதநல்லிணக்க பெருமைகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாஜக வெறுப்பையும், இனவாத கொள்கைகளையுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறது’ என பதிவிட்டிருந்தார்.