கரோனா சிகிச்சை வார்டில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், தனது பணியை முடித்தபின் வீட்டிற்குச் செல்லாமல், காரிலேயே தங்கியிருந்து மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று பணியைத் தொடர்ந்துவரும் நெகிழ்ச்சி சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000 ஐ கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சையளிக்க மருத்துவப் பணியாளர்கள் இரவுபகலாக உழைத்து வருகின்றனர். அந்தவகையில் மத்தியப்பிரதேசத்தின் போபாலில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், தனது பணியை முடித்தபின் வீட்டிற்குச் செல்லாமல், காரிலேயே தங்கியிருந்து மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று பணியைத் தொடர்ந்து வரும் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

போபால் ஜே.பி.மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சச்சின் நாயக், கெரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார். தினமும் தனது பணிநேரம் முடிவடைந்தது, தனது காரில் படுத்து ஓய்வெடுக்கும் அவர், மருத்துவமனை வளாகத்திலேயே தனது பணிக்குத் தயாராகி மீண்டும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வருகிறார்.
மக்களுக்கு மருத்துவச் சேவை புரிவதற்காக, வீட்டில் இருக்கும் தனது இரண்டு வயதுக் குழந்தையைக் கூட நேரில் சென்று பார்க்காமல் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அவர் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே வாகனத்தில் படுத்துறங்கி, பணிபுரிந்து வருவது பலரையும் நெகிழ வைத்துள்ளது.