
வாகனம் ஓட்டும்போது மடிக்கணினி பயன்படுத்தி வேலை பார்த்த இளம்பெண்ணுக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில், இளம்பெண் ஒருவர் வாகனம் ஓட்டிக் கொண்டே மடிக்கணினி பயன்படுத்தி வேலை பார்த்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாகனம் ஓட்டும் பெண்ணை அடையாளம் கண்டனர்.
இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் நேரில் சந்தித்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் குறித்து பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், ‘வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், வாகனம் ஓட்டும்போது வேலை செய்யக்கூடாது’ என்று குறிப்பிட்டார். மேலும், அந்த பதிவில், அந்த பெண் மடிக்கணினியைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டும் வீடியோவும், அவருக்கு அபராதம் விதிக்கப்படும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.