உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் நகரில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் புதிய ஆடைகள் அறிமுகம் செய்யும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாபா ராம்தேவ் இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்து மிகவும் தீவிரமான உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'நாட்டில் மக்கள் தொகைப் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு கூட்டங்களில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நாட்டில் முஸ்லிம் மதம், இந்து மதம் என எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால், அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மக்கள் தொகைப் பெருக்கம் குறையும். அதுமட்டுமல்லாமல் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் படிக்க இடம் வழங்கப்பட கூடாது. அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதையம், அரசு பணியில் அமர்த்தப்படுவதையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்தால்தான் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்' என பேசினார். அவரின் இந்த பேச்சு தற்போது பல்வேறு தரப்பினர் இடையேயும் எதிர்ப்பை பெற்று வருகிறது.