புதுச்சேரி, கிருமாம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப் பின்பு காவ்யா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒரே மகள் பிறந்தார். 17 வயதாகும் காவ்யா தற்போது பி.எஸ்.சி. சைக்காலஜி முதலாமாண்டு படித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி காவ்யாவின் தாயார் பரமேஸ்வரி வெளியில் சென்றிருந்த நிலையில் காவ்யா மாடியில் துணி காயவைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது இவர்களது தெருவில் 4 வீடு தள்ளி வசித்துவந்த அருண்குமார் (24) என்ற இளைஞர் காவ்யா வீட்டின் பக்கவாட்டு வழியாக வீட்டினுள் புகுந்துள்ளார். காவ்யா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவுடன் கதவை சாத்திய அருண்குமார், காவ்யாவின் வாயில் துப்பட்டாவைத் திணித்து வாயை அடைத்து, சுவற்றில் நெட்டித் தள்ளி அவரது வயிற்றில் தனது வலது காலால் உதைத்துள்ளார். இதில் காவ்யா மயக்கமான பிறகு, அவரது துணிகளைக் களைத்து மிருகத்தனமாக நடந்துள்ளார். மேலும், அருண்குமார் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார். அந்த வீடியோவைக் காவ்யாவிடம் காட்டி அவரது அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
கடந்த ஜூன் 6ஆம் தேதி மாதவிடாய் என்ற போதிலும் விடாமல் அவரை 4, 5 முறை வன்புணர்ச்சி செய்துள்ளார். இதில் காவ்யாவுக்கு உதிரப்போக்கு அதிகமாகியுள்ளது. மேலும் சித்த பிரமை பிடித்தவர் போலும் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் பரமேஸ்வரி, கேரளாவில் உள்ள தனது தங்கை சித்ராவை வரவழைத்து ஜுன் 12ஆம் தேதி மாலை உடனடியாக கேரளாவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர் பரிசோதனை செய்ததில், உதிரப்போக்கு நிற்காமல் சென்றுள்ளது. மேலும், கிட்னி பாதிக்கப்பட்டு, லிவர் ஃபெயிலியர் ஆகியுள்ளது என தெரிவித்தனர். காவ்யாவின் நிலையைக் கண்ட மருத்துவர், அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து விசாரித்ததில் காவ்யாவுக்கு வேறு ஏதோ பிரச்சனை என தெரிந்துகொண்டு, அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
பின்னர் காவ்யாவை அனந்தபுரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது சோதனை செய்ததில் காவ்யாவின் மார்பு, பிறப்புறுப்பு பகுதிகளில் பற்களால் கடித்த காயங்களும், கொடூரமான காயங்களும் இருந்துள்ளன. அதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். மருத்துவக் கல்லூரியில் சீரியஸான நிலைமையில் இருந்த காவ்யாவை பார்த்த மருத்துவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து பெண் காவலர்களும் பெண் நீதிபதியும் நேரில் வந்து விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது, நடந்தவை அனைத்தையும் நீதிபதியிடம் கூறி காவ்யா கதறி அழுதுள்ளார். லிவர் டிரான்ஸ்பரன்ஷன் செய்வதற்குத் தயாரான நிலையில், ஜூன் 19ஆம் தேதி காவ்யா உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கேரள காவல்துறை புதுச்சேரிக்கு வந்து அருண்குமாரை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், இன்று (24.06.2021) செய்தியாளர்களைச் சந்தித்த காவ்யாவின் தாயார் பரமேஸ்வரி மற்றும் உறவினர்கள், "சம்பவம் நடைபெற்ற பகுதி புதுச்சேரி என்பதால் காவ்யாவின் பெற்றோர் புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அதை அவர்கள் வாங்காமல் அலட்சியப்படுத்துவதாகவும், பாஜகவைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள் அருண்குமார் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்” என குற்றம்சாட்டினர்.
இதனிடையே புதுச்சேரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட பெண் காவ்யாவின் தாயாருக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.