குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் அசாம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா கடந்த 23 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார். அப்போது குழந்தை திருமணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், குழந்தை திருமணங்களின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க அசாம் அரசு முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் குழந்தை திருமணங்கள் தொடர்பான 4004 வழக்குகள் பதிவு செய்து, 2044 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தை திருமணத்திற்கு உதவியதாக புரோகிதர்கள் மற்றும் காஜிக்கள் என 51 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து அம்மாநில காவல்துறை டிஜிபி கூறுகையில், "அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு மேலும் இந்த நடவடிக்கை தொடரும். குழந்தை திருமணம் போன்ற சமூக விரோத செயலிலிருந்து மாநிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு மக்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.