குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வடகிழக்கு இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த மசோதாவை எதிர்த்து பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் அஸ்ஸாம் டிஜிபி அங்கு நடைபெறும் போராட்டம் குறித்து பேசுகையில், “துரதிர்ஷ்டவசமாக நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மோசமான சூழ்நிலை ஏற்பட்டதன் விளைவாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, மக்களுக்கும் பொது சொத்துக்களுக்கும் சேதம் உண்டாகாமல் காக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் எங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் பேசுகையில், “ 136 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது மற்றும் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை தூண்டும் விதமாகவும் அதை பரப்பும் விதமாகவும் செயல்பட்ட மக்களும், சில அமைப்புகளின் முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.