அசாம் மாநில சட்டப்பேரவை நேற்று (12.07.2021) கூடிய நிலையில், அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கால்நடைகளைப் பாதுகாக்கும் புதிய சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவில், கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மசோதாவில், மாட்டிறைச்சி விற்பனை குறித்த பிரிவுகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தக் கால்நடை பாதுகாப்பு மசோதா இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் மாட்டுக்கறி சாப்பிடாத சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பதை தடை செய்கிறது. அதேபோல் கோவில்கள், வைணவ மடங்கள் போன்ற இந்து மத தளங்களைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பதை தடை செய்கிறது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு அசாம் மாநில காங்கிரஸும், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டம் தெரிவித்துள்ளன. இது வகுப்புவாத பதற்றத்திற்கு வழிவகுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்களின் உணவுப் பழக்கத்தில் அரசு தலையிடக்கூடாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.