டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுதீன் ஒவைஸி, "இந்த வன்முறையை நான் கண்டிக்கிறேன். தாக்குதல் நடத்தியவர்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் கோழைகளைப்போல தங்கள் முகங்களை மூடிக்கொண்டு தாக்கியுள்ளனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதங்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் அவர்கள் பாதுகாப்பாக உள்ளே செல்ல அனுமதிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று கூட உள்ளது. இது மிக மோசமான விஷயம்" என தெரிவித்துள்ளார்.