தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அரசுப்பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கோவிந்த்சிங் தோடஸ்ராவ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதே போல், சுயேட்சை எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் வேட்பாளருமான ஓம்பிரகாஷ் ஹட்லா உள்ளிட்ட சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மகனான வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை நேற்று (27-10-23) சம்மன் அனுப்பியுள்ளது.
வைபவ் கெலாட், மொரீஷியஸைச் சேர்ந்த ஷிவனார் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் மூலம் பணமோசடியில் ஈடுபட்டு வந்ததாக அமலாக்கத்துறைக்கு புகார் வந்தது. மேலும், அந்த புகாரில், ’ஷிவனார் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மும்பையைச் சேர்ந்த ட்ரைடன் ஹோட்டல்ஸ் என்ற நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. ட்ரைடன் ஹோட்டல்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனரான ரத்தன் ஷர்மா, வைபவ் கெலாட்டின் வாடகைக் கார் நிறுவனத்தின் தொழில் பங்குதாரர் ஆவார். அதனால், இந்த மோசடியில் வைபவ் கெலாட்டுக்கு தொடர்பு இருப்பதாக’ புகாரில் கூறப்பட்டது.
இது தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தன. அவ்வழக்கு தொடர்பாக ட்ரைடன் ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு எதிரான சோதனையில் ரூ.1 கோடியே 20 லட்சம் சட்டவிரோத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, ட்ரைடன் ஹோட்டல்ஸ் நிறுவனர் ரத்தன் ஷர்மாவுக்கும், வைபவ் கெலாட்டுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று (27-10-23) விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகும்படி வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதல்வர் அசோக் கெலாட், “ நாட்டில் தெருநாய்களை விட அமலாக்கத்துறை தான் அதிகமாக அலைகிறது. தற்போது அமலாக்கத்துறை அரசியல் கருவிகளாக மாறி வருகின்றன” என்று கூறியிருந்தார். அதே போல், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “அசோக் கெலாட்டின் அரசை பா.ஜ.க கெடுக்க விரும்புகிறது. காங்கிரஸ் தலைவர்களைச் சோர்வடைய செய்து பயமுறுத்த விரும்புகிறார்கள். இதை நாங்கள் வலுவாக போராடி எதிர்கொள்வோம்.