ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை தழுவியது. அம்மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக அதிர்ச்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம். ரமேஷ், வெங்கடேஷ், மோகன் ராவ் உள்ளிட்ட நான்கு எம்பிக்கள் இரு நாட்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டாவை டெல்லியில் சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்.
தெலுங்கு தேசம் கட்சியில் மொத்தம் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்த நிலையில், அதில் நான்கு எம்.பிக்கள் கட்சி மாறியதால் அக்கட்சி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஐரோப்பா நாடுகளுக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டு இருக்கும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் எம்பிக்கள் பாஜகவுக்கு மாறிய செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்பு ட்விட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்ட நாயுடு "தெலுங்கு தேசம் கட்சி" மீண்டும் எழும், வரலாறு படைக்கும் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்கள் இன்று இந்திய துணை குடியரசுத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவை சந்தித்து பாஜகவில் இணைந்த தெலுங்கு தேச கட்சியின் நான்கு எம்பிக்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை வழங்கின. ஏற்கனவே பாஜகவில் இணைந்த எம்பிக்கள் துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் தங்களை பாஜகவின் எம்பிக்களாக அங்கீகரிக்கக் கூறி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் சுற்றுலாவிற்கு சென்றிருக்கும் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனை பெயரில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் துணை குடியரசுத்தலைவரிடம் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.