புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி கடந்த 13 ஆம் தேதி 2023 -24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் இன்று முடிவடைந்தது. இதன் பின்பு முதல்வர் ரங்கசாமி பேரவையில் உரையாற்றினார். அப்போது, “அனைவரும் எனது பட்ஜெட்டை பாராட்டியுள்ளார்கள். குறைகளை சுட்டிக் காட்டியும், கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கிய முழுத் தொகையும் செலவு செய்வேன். புதுச்சேரியில் காவல்துறை பலப்படுத்தப்படும். சுற்றுலாவை மேம்படுத்தி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் அறிவித்த எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும்” என உறுதியளித்த முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதன்படி, ஏற்கனவே பட்ஜெட்டில் பட்டியலின பெண்களுக்கு மட்டும் உள்ளூர் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து பெண்களும் அரசு உள்ளூர் பேருந்தில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.