டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருவதோடு, தேர்தல் பணிகளிலும் இறங்கியுள்ளன. டெல்லியில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரச்சார களங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.
இதில் பிரச்சாரம் செய்யும் போது பிரதமர் மோடி மூன்று விஷயங்கள் குறித்து மக்களிடம் பேச வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "பிரதமரும் அவரது அமைச்சர்களும் யதார்தத்திடம் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே டெல்லி தேர்தலில் அவர்கள் பேசவேண்டிய மூன்று விஷயங்களை நான் கூறுகிறேன்.
1) கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 2 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் 2019 டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2) வரி வருவாய் 2019-20 ஆம் ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டிலிருந்து ரூ.2.5 லட்சம் கோடி குறையும்.
3) எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதியில் பற்றாக்குறை ஏற்படும்.
மக்கள் பொருளாதாரம் குறித்த உண்மைகளைக் கேட்க விரும்புகிறார்கள். மேலும் மோடி கூறிய ‘அச்சே தின்’(நல்ல நாள்) 6 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் ஏன் வரவில்லை என்பதையும் அவர் விளக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.