மாநில அரசுகள் தேர்தல் காலங்களில் கொடுக்கும் இலவசத் திட்டங்களை தங்களால் நெறிப்படுத்த முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நேரங்களில் மாநில அரசுகள் தங்கள் போக்கிற்கு இலவசத் திட்டங்களை அறிவிப்பதால் மாநில அரசுகளின் நிதிச்சுமை அதிகரிப்பதாகவும், தேர்தல் ஆதாயத்திற்காக கட்சிகள் கொடுக்கும் கவர்ச்சிகர இலவசத் திட்டங்களால் பின்னாளில் மக்களே இன்னல்களைச் சந்திக்கின்றனர். எனவே அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிவிப்புகள், வாக்குறுதிகளை நெறிப்படுத்த வேண்டும் என பாஜக கட்சியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்நிலையில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், 'தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ இலவசங்களை அறிவிப்பதும், வழங்குவதும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் கொள்கை முடிவு எனவே இலவசத் திட்டங்கள் உள்ளிட்ட கொள்கை முடிவுகளில் தங்களால் தலையிட முடியாது' என விளக்கமளித்துள்ளது.
அண்மையில் மாநில அரசு பணிகளிலிருந்து விடுபட்டு மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட ஆலோசனை அப்பொழுது சில மாநிலங்கள் கொடுக்கும் இலவசத் திட்டங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி செல்வதாகவும், இதுபோன்ற இலவச திட்டங்களால் இலங்கை தற்பொழுது சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடியை இந்தியாவும் எதிர்காலத்தில் சந்திக்க வாய்ப்பிருப்பதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கூறியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.