Skip to main content

காதலி பிரிவதற்குக் காரணம்...; இளம்பெண்ணைக் கொலை செய்த குற்றவாளி கைது!

Published on 27/07/2024 | Edited on 27/07/2024
Accused arrested in Bangalore hostel girl case

பெங்களூரு, கோரமங்களாவில் உள்ள வி.ஆர். லே-அவுட்டில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த ஜூலை 23 ஆம் தேதி இரவு 11 மணியளவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், விடுதியில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த 24 வயதான கிருத்தி குமாரி என்ற இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். மூன்றாவது மாடியில் அரங்கேறிய இந்தக் கொடூர சம்பவத்தில் கிருத்தி குமாரி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

மர்ம நபர் பெண்கள் விடுதியில் புகுந்ததை பார்த்த தங்கும் விடுதியில் இருந்த பெண்கள், பயத்தில் அவர் அவர் அறையில் ஒளிந்து கொண்டார். இதனால், மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோரமங்களா போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, விடுதி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட கிருத்தி குமாரிக்கும், கொலையாளிக்கும் நேரடி தொடர்பு ஏதும் இல்லை என்று போலீசார் கூறுகின்றனர். 24 வயதான பிகாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி தனியார் கம்பெனியில் வேலை செய்ததால், விடுதியில் தங்கியிருந்த சூழலில், கொடூரமாக கொல்லப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கொலையாளி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிசிடிசி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் மஞ்சள் பையுடன் பெண்கள் விடுதியின் மூன்றாவது  தளத்திற்குச் சென்ற இளைஞர், விருந்தாளி போல கதவைத் தட்டுகிறார். உடனே, கிருத்தி குமாரி கதவை திறந்தபோது நொடி பொழுதில் குத்தி கொலை செய்யும் அதிர்ச்சி சிசிடிசி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இதனிடையே, போலீசார் கொலையாளி அபிஷேக் என்ற இளைஞர் என்பதை அடையாளம் கண்டனர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த அபிஷேக், கொலை செய்யப்பட்ட கிருத்தி குமாரி தங்கியிருந்த அறையிலிருந்த வேறொரு பெண்ணைக் காதலித்து வந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், அபிஷேக்குக்கு வேலை கிடைக்காததால் அண்மையில் அவரை விட்டு அந்தப் பெண் விலகியுள்ளார். மேலும், கிருத்தி குமாரியின் பரிந்துரையின் பேரில் வேறொரு தங்கும் விடுதிக்கு மாறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அபிஷேக் கிருத்தி குமாரியைக் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். இருப்பினும், தலைமறைவாக இருக்கும் அபிஷேக்கை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், குற்றவாளி அபிஷேக்கை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அபிஷேக் தனது சொந்த மாநிலத்திற்குத் தப்பித்துச் சென்ற நிலையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காதலி தன்னை விட்டி பிரிந்ததற்குக் கிருத்தி குமாரிதான் காரணம் என நினைத்து அவரை கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்